கோவிட் -19 உம் ஊடகவியலாளரும்
அஜித் பெரகும் ஜெயசிங்க
இது சிங்கள மொழி லங்கா பத்திரிகைக்கு நான் எழுதுகின்ற ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு. லங்கா பத்திரிகை தனது இலத்திரனியல் பதிப்பை வெளியிடுவது பாராட்டத்தக்கது, ஏனெனில் தொற்றுநோய் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பத்திரிகைகள் ஒரு குறிப்பிட்ட பொறுப்பைக் கொண்டுள்ளன.
உலக அளவில் பரவி வரும் தொற்றுநோய் பற்றிய துல்லியமான தகவல்களைப் வழங்குவதோடு மட்டுமல்லாமல், சுகாதார மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள், வாழ்வாதாரங்கள், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி தேவைகள், மருந்து பொருட்கள் விநியோகம், ஆடை, போக்குவரத்து, தகவல் தொடர்பு, வெகுஜன ஊடகங்கள், கலாச்சார விவகாரங்கள், பாலியல் மற்றும் உளவியல் தொடர்பான தேவைகள் போன்றவற்றை பத்திரிகைகள் கவனிக்க வேண்டும். சுருக்கமாக குறிப்பிடுகையில், பத்திரிகையாளர்கள் கோவிட் -19 தொற்றுநோய் பரவுகையின் கீழ் கூட பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்.
இருப்பினும், அவர்கள் தங்களுடன் பணியாற்றும் சகபாடிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும். இலங்கையின் பிரபலமான தொலைக்காட்சிகளின் சில ஊடகவியலாளர்கள் எவ்வளவு அஜாக்கிரதையான முறையில் களத்தில் இருந்து தகவல் சேகரித்தனர் என்பதை நாங்கள் சமீபத்தில் கவனித்தோம். அதிர்ஷ்டவசமாக, சமூக ஊடக விமர்சனங்களுக்குப் பிறகு அவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டனர்.
இலங்கையில் பத்திரிகை தொழில் நடாத்தப்படும் முறைக்கேற்ப, விநியோகிக்கப்படும் பத்திரிகைகள் மூலம் வைரஸ் தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை நாம் நிராகரிக்க முடியாது. இவ்வாறான பின்னணியில், தலைநகரம் அமைந்துள்ள மேற்கு மாகாணத்தில் கால வரையற்ற ஊரடங்கு உத்தரவின் மத்தியில் செய்தித்தாள்கள் அச்சிடுதல் நிறுத்தப்பட்டுள்ளது நல்லது. இருப்பினும், பத்திரிகைகள் தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமான வெகுஜன ஊடகமாகும் என்பதுடன் பத்திரிகைகள் ஈடு செய்யபட முடியாவை. ஒரு இலத்திரனியல் செய்தித்தாள் பதிப்பானது அச்சிடப்பட்ட செய்தித்தாள் பதிப்பை பிரதியிட முடியாததாக இருந்த போதிலும், பதிப்பை வெளியிடுவதை நிறுத்துவதிலும் பார்க்க இலத்திரனியல் பதிப்பை வெளியிடுவது சிறந்ததாகும்.
தொற்றுநோய் பரவலின் மத்தியில் பணி புரியும் ஊடகவியலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஒரு ஆலோசனையை சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. அவை இலங்கை ஊடகவியலாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உலகளாவிய தொற்றுநோய் பரவலுக்கு முன்னர் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. முதலில் பணியிடத்தில் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்வோம். ஊடக தொழில் வழங்குனர்கள் கொரோனா வைரஸ் பரவலை ஒரு சுகாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடி என்று கருதி, தங்கள் ஊழியர்களைப் பராமரிக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆலோனை கூறப்படுகின்றது.
உலக சுகாதார அமைப்பு (WHO) வழங்கிய பொதுமக்களுக்கான சுகாதார பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் பத்திரிகையாளர்கள் மற்றும் பிற ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளும் பின்பற்ற வேண்டும்.
இந்த நோக்கத்திற்காக, அலுவலகத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயங்களைக் குறைக்க வீட்டிலிருந்து வேலை செய்வதில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆரோக்கியமான நிலையில் பணியாற்றுவதற்கான உரிமையை கோர வேண்டும், மேலும் தாங்கள் கொரோனா வைரசுக்கு தொடர்புறும் அபாயம் இருக்கும் போது வேலைக்கு செல்லக் கூடாது.
அலுவலக உபகரணங்கள் மற்றும் இடம் குறிப்பாக அவை ஊழியர்களால் பகிரப்படும் போது தொடர்ந்து சுத்தம் செய்யப்பட வேண்டும்.
இந்த நெருக்கடியான நிலையில் பயணம் செய்வது ஊடக துறையினருக்கு பாதிப்பு தருவதால் பயணத்தின் அவசியம் மற்றும் பயணிப்பவரின் உடற் தகுதி மற்றும் அவர்களின் உடலியல் சுகாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் கோரப்படும் மருத்துவ ஆலோசனைகள் குறித்து வெளிப்படையான கலந்துரையாடல் இருக்க வேண்டும். வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டிய பத்திரிகையாளர்கள் மற்றும் பிற ஊடகத் துறையினர் கவனமாகத் திட்டமிட வேண்டும்.
ஊடக துறையினர்கள் தங்கள் தொழில் இருப்புக்கு எந்த வித ஆபத்தும் இல்லாமல், எந்தவொரு கொரோனா வைரஸ் தொடர்பான தேசிய அல்லது சர்வதேச செயற்பாட்டையும் அவர்களின் உடல் நலம் மற்றும் வாழ்க்கைக்கு ஒரு உண்மையான ஆபத்தை பிரதிபலிக்கும் போது நிராகரிக்க உரிமை உண்டு.
கையுறைகள் மற்றும் தொற்றுநீக்கிகள் போன்ற சில தனிப்பட்ட பாதுகாப்பு பொருட்கள் வேலையின் போது அவசியமாக இருக்கலாம், மேலும் இவை பயணத்திற்கு முன் பாதுகாப்பதற்காக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
கோவிட் -19 பாதிப்பின் தற்போதைய நிலமைகள் குறித்த அறிக்கை மிகவும் எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் இலத்திரனியல் ஊடகங்கள் இன்னும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதை நாம் காணவில்லை. தகவல் சேகரிக்கும் களத்தில் மட்டுமல்லாது, ஸ்டுடியோ நிகழ்ச்சிகளிலும் பாதுகாப்பு முக்கியமானது. உதாரணமாக, கோவிட் -19 தொற்றுக்குட்பட்ட ஒரு சிறப்பு மருத்துவர் இலங்கை தேசிய தொலைக்காட்சி நிறுவனமாகிய ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஒரு தொலைக்காட்சி சுகாதார நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால் குறைந்த பட்சம் ஒப்பனையாரை கூட சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. ஊடகத் தொழிலாளர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதைத் தடுக்க சுகாதாரத் துறை மற்றும் பிற துறை வல்லுநர்களை ஸ்டுடியோ நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது தீவிர முன்னெச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அநேகமாக எதிர்காலத்தில் சமூக அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும், மேலும் இது போன்ற சம்பவங்களை பற்றி அறிக்கையிடும் போது, ஊடகவியலாளர்கள் அதன் மூலம் ஏற்படும் ஆபத்து குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும்
குறுகிய காலத்தில் வெளியிடப்படும் பிரதேச ரீதியான பயண கட்டுப்பாடு போன்ற பொது சுகாதார நடவடிக்கைகளுக்கான குறித்த பொது அறிவிப்புக்களை உள்ளூர் செய்திகளை சேகரிக்க செல்லும் ஊடகவியலாளர்கள் கண்காணிப்பது முக்கியம் என்று சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு குறிப்பிடுகிறது. அதன் பிரகாரம், அவை ஊடகவியலாளர்களை குறிப்பிட்ட பிரதேசங்களுக்குள் உட்செல்வதற்கான மறுப்பு, அங்கீகாரம் அல்லது அதனை மீளெடுத்தல் அத்துடன் காட்சிகளையும் பதிவுகளையும் அழிக்க முயற்சித்தல் போன்ற செயற்பாடுகள் தகவல்களை அறிக்கைப்படுத்துவதை மேலும் கட்டுப்படுத்துவதாக கூட இருக்கலாம். பத்திரிகையாளர்கள் பதிவு செய்த செய்தி காட்சிகளின் நகலை நடைமுறைக்கு பொருத்தமான வகையில் கூடிய விரைவில் தங்கள் செய்தி அறைக்கு அனுப்புவதன் மூலம் காப்புப் பிரதிகளைத் தயாரிக்க வேண்டும்.
பொதுவாக, பத்திரிகையாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி மிகவும் முக்கியமானது. மற்றைய அன்றாட ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்களைப் போலவே இந்த தொற்றுநோய் பரவும் சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களின் வருமானம் பாதிக்கப்படுவதனால் ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொழிற்சங்கங்கள் சுயாதீன பத்திரிகையாளர்கள் மற்றும் மாகாண நிருபர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
மொழிபெயர்ப்புகள்
කොවිඩ්-19 සහ ජනමාධ්යවේදියා
Covid-19 and the journalist